புலிக்குப் பிறந்தது பூனையாகலாமோ..? மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்ய வேண்டும்!

தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பார்வை குறித்து இங்கே சில விசயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
அரசியல் என்றாலே கால சூழலுக்கு ஏற்ப காய்நகர்த்துதல் என்பதுதான். அந்த பணியை மிகவும் நூதனமாகவும் நுணுக்கமாகவும் முன்னாள் தலைவர்கள் செய்து வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அதாவது ராஜதந்திரத்தோடு செயல்பட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெறுவதோடு ஆட்சியை, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல் அல்லது தக்க வைத்துக் கொள்ளுதல். அந்த வகையில் இன்றைய அதிமுக அரசின் ஏகோபித்த தலைவராக இருந்த, மக்களின் முதல்வர் என்று புகழப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அந்த கட்சியில் உட்பூசல் ஏற்பட்ட நிலையிலும் சரியான காய்நகர்த்துதல் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கட்சிப் பதவியையும் கைப்பற்றுவதில் சசிகலா சரியான ராஜதந்திரியாகவே செயல்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மக்களின் வரவேற்பு வாக்காளர்களின் விருப்பம் என்பதையெல்லாம் தாண்டி அவர் தனக்கான இடத்தையும் ஆதரவையும் தேடிக் கொண்டிருப்பது அவரின் ராஜதந்திரத்தை எடுத்துக் காட்டுகிறது. அதில் என்ன நீதி இருக்கிறது எங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, வென்றிருப்பது பணநாயகமா, ஜனநாயகமா என்றெல்லாம் நாம் இப்போது உள்ளே சென்று ஆராய வேண்டியதில்லை. ஒரு வழக்கில்  நீதி நிலைநாட்டப்பட்டு அவர் பெங்களூர் சிறையில் உள்ளார் என்பது வேறு கதை. ஆனால் ஒரு அரசியல் சூத்திரதாரியாய், மாபெரும் தலைவரின் இடத்தை எப்படி கைப்பற்ற வேண்டும் என்ற தந்திரத்தை தெரிந்து வைத்து அதன் போக்கில் வென்று இருக்கிறார்.  
இந்த வெற்றி நிலையானதா,.. அல்லது தற்காலிகமானதா என்றும் நாம் பார்க்க வேண்டியதில்லை. அவரின் காய்நகர்த்தலின் முதல் வெற்றி இது என்றே பார்க்க வேண்டும். சசிகலா என்பவர் யார்?, குரலை கூட நாம் கேட்டதில்லை அவருக்கு அரசியலில் என்ன தெரியும் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இது முதல் சவுக்கடி அல்லவா! சரி இப்போது நான் ஏன் சசிக்கலாவை புகழ்கிறேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்..  
33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த ஒருவரின் அரசியல் காய்நகர்த்துதல் இத்தனை தெளிவாக இருக்கிறது என்றால் அரை நூற்றாண்டுகள் தமிழகத்தில் அரசியலில் இருக்கும் மிகப்பெரிய தலைவரான கருணாநிதியின் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு ராஜதந்திரியாக இருந்திருக்க வேண்டும்!
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் செயல் தலைவராக இருக்கும் அவர் எந்த மாதிரியான காய்நகர்த்துதலை முன்னெடுத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம்  அவரது செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பார்வையில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
1. தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவரான ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சக அரசியல் தலைவராக முதல்வரின் உடல் நலம் குறித்த வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் தமிழக அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். 
2 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலதரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட போது ஒரு எதிர்கட்சித் தலைவராக தன் நிலைப்பட்டை அவர் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அல்லது ஒரு சக அரசியல் தலைவர் என்ற முறையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு அளித்த விளக்கத்தின் நிறைகுறைகளை மக்களிடம் பேசியிருக்க வேண்டும். 
3. திமுகவின் இளைஞர் அணியும், மாணவர்கள் அணியும் நடத்தாத போராட்டமோ புரட்சியோ இல்லை என்ற வரலாற்று பக்கங்களை மு.க. ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக பார்க்கப்படும் மெரினா புரட்சி குறித்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் இருந்த குறைகளை வலுவாக விமர்சித்திருக்க வேண்டும். 
4. தமிழகத்தில் அதிமுக இண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்கள் கடந்து விட்ட சூழலில் இதுவரை அரசின் செயல்பாடுகள் முற்றிலும் கேள்விக்குறியாகவே உள்ளன என்பது தெரிந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து ஸ்திரமான எதிர்கட்சியாக திமுக இதுவரை எந்த போராட்டத்தையும் முன்னெடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
5. அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் ஒழிப்புக்கு குரல் கொடுத்த எதிர்கட்சிகள் இன்று ஊமைகளாகிப் போயிருப்பதும், மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக எதிர்கட்சியாக குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்தும் அதை முறையாக செய்யாமல் திமுக இருப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. 
6. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் தலையிட திமுகவுக்கு உரிமை இல்லை என்றாலும் மக்கள் விரும்பாத ஒருவரை முதல்வராக ஆக விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் திமுக இறங்கி இருக்குமேயானால் ஸ்டாலினுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
7. எதிர்க் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு சசிகலா மீது தனிப்பட்ட கருத்து எதுவாக இருப்பினும், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த தமீம் அன்சாரி மக்கள் கருத்து கேட்க தன் அலுவலகத்தில் வாக்கு சேகரிப்பு பெட்டி வைத்தது போல் திமுக தமிழகம் முழுவதும் ஒரு வாக்குச் சேகரிப்புப் பெட்டி வைத்து மக்களின் கருத்தை ஆளுநரிடம் பதிவு செய்திருக்கலாம். நிச்சயமாக அது  திமுகவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கும். 
8. சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் கூட்டத்தின் போது திமுகவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க அமைதியான உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கலாம். 
9. ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூட்டத்தின் போதும் திமுக ஒன்று வெளிநடப்பு செய்கிறது. அல்லது வெளியேற்றப்படுகிறார்கள் என்ற நிலையை மாற்றி ஒட்டு மொத்த மக்களையும் ஊடகத்தையும் தங்கள் பக்கம் திருப்புகிற வகையில் ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். 
10. அனுமதி பெறாமல் உண்ணாவிரதம், போராட்டம், ஊர்வலம், முற்றுகையிடுதல் போன்ற பழைய போராட்ட நடவடிக்கைகள் எல்லாம் ஒரு சம்பிரதாயமாகவே போய்விடும் என்பதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறியாததல்ல. எனவே திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய இந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

0 Comments: